இந்தியாவில் கடந்த ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 81 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் ஒருவருக்கு கூட தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை தொடர்பான சர்வதேச ஆய்வறிக்கையை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2016-ல் இந்தியாவில் மட்டும் 136 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது 2015-ல் 75 ஆக இருந்தது. கொலைக் குற்றங்களுக்குதான் அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆள்கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மரண தண்டனை 2016-ல் இரு மடங்காகி உள்ளது. கடத்தப்பட்ட தனிநபர், பாதுகாப்புப் படை வீரர்கள் கொலை செய்யப்பட்டால் இந்த சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அதேநேரம் 2016-ல் இந்தியாவில் ஒரு மரண தண்டனை கூட நிறை வேற்றப்படவில்லை. ஆனால் 400-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு 73 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது 2015-ம் ஆண்டின் 320-ஐவிட 73 சதவீதம் குறைவு ஆகும்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. சீனா, இந்தோனேசியா, ஈரான், குவைத், லாவோஸ், மலேசியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
கடந்த 2016-ல் உலகம் முழுவதும் 23 நாடுகளில் 1,032 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட் டுள்ளது. 2015-ல் 25 நாடுகளில் 1,634 பேருக்கு நிறைவேற்றப்பட்டது. இந்த 25 நாடுகளில் 2 நாடுகள் மரண தண்டனையை 2016-ல் ரத்து செய்துவிட்டது. 2016-ல் சீனா, ஈரான், சவுதி அரேபியா, இராக் மற்றும் பாகிஸ்தானில் அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.