மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 60.
இன்று காலை வீட்டில் இருந்த அமைச்சர் திடீரென அசவுகரியமாக உணர்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே. கடந்த 2009-ம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.
பிரதமர் மோடி இரங்கல்:
அனில் மாதவ் தவே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அனில் மாதவ் தவேவின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தேன். நேற்று மாலைவரை அவருடன் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசித்தேன். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். பொதுச்சேவையில் ஈடுபட்டவர் என்று மக்கள் அவரை நினைவு கூர்வர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கய்ய நாயுடு இரங்கல்:
இதேபோல் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், "அனில் மாதவ் தவேவின் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது இதயபூர்வ இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.