மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் என்ஜிஓக்கள், சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற் கான கடைசி தேதியை நீட்டிக்கும் வகையில், லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் 44 பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்ததன் மூலம், நாடு முழுவதும் உள்ள 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசு நிதி பெறும் என்ஜிஓக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைத்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து, ரூ.1 கோடி நிதி பெறும் என்ஜிஓ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் நன்கொடை பெறும் அமைப்புகள் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டன.
இந்த அமைப்புகள், அவற்றின் நிர்வாகிகள், மத்திய அரசுப் பணி யாளர்கள் ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி தங்களின் சொத்து மட்டுமல்லாது, மனைவி மற்றும் குடும்பத்தாரின் சொத்து விவரங்களையும் ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
என்ஜிஓ அமைப்புகளின் நிர்வாகிகளும் சொத்து விவரங் களை தாக்கல் செய்யவேண்டும் என்ற விதிக்கு தொழில்துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை ரத்து செய்யக்கோரி, இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் எம்பி.க்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது.
இந்நிலையில், நேற்று மக்களவையில் அலுவல் குறிப்பில் முன்கூட்டியே இடம்பெறாத இந்த சட்டத்திருத்த மசோதா, கேள்வி நேரம் முடியும் சமயத்தில் திடீரென தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை இணையமைச்சர் ஜிதேந்தர் சிங், மசோதாவை அறிமுகம் செய்தார்.
‘25 எம்பிக்கள் கொண்ட குழு பிரதமர் மோடியை சந்தித்து தங் களின் பிரச்சினைகளை தெரிவித் தனர். இவ்விஷயத்தில் நிலைக் குழு முடிவெடுத்து, அடுத்த கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப் பிக்கும். பிரச்சினை தீரும் வரை, என்ஜிஓக்கள் மற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் சொத்து விவரங் களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதுதான் சரி’ என, அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் இந்நடவடிக் கைக்கு காங்கிரஸும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், ‘லோக்பால் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது’ என, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.
எனினும், லோக்பால் சட்டத்தின் மிக முக்கியமான 44-வது பிரிவு தொடர்பான திருத்தத்தை அவ சரகதியில் நிறைவேற்றுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
‘இந்தச் சட்டத்தை நிலைக்குழு தான் வடிவமைத்தது என்ற நிலையில், அதே நிலைக்குழு இந்த திருத்தத்தையும் பரிசீலிக்கட்டும். நிலைக் குழு மறுத்துவிட்டால் அதை ஏற்றுக்கொள்வோம்’ என, அமைச்சர் பதில் அளித்தார். பின்னர், குரல் ஓட்டெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது.
இச்சட்டம் அமலுக்கு வந்த தில் இருந்து, சொத்து விவரங் களை தாக்கல் செய்வது தொடர் பான காலக்கெடு இதுவரை 5 முறை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.