அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பாகிஸ்தானுக்கு பிரமாதமான சலுகை வழங்குவதாகக் கூறிய கட்ஜு, ‘காஷ்மீருடன் பிஹாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.
“பாகிஸ்தானியர்களே நமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம். நாங்கள் காஷ்மீரை உங்களுக்குக் கொடுக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் பிஹாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு கூட்டுச் சலுகை. இரண்டையுமே சேர்த்துத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது” என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பிஹார் மக்களிட மிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, தனது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் “பெரும்பாலான பிஹார் மக் களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு” என கட்ஜு பதிவிட்டிருந் தார். அதன்பிறகும் “எனக்கு தற்போதுதான் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப் பூர்வ தகவல் வந்தது. அவர்கள், காஷ்மீருடன் பிஹாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டனர். மேலும் இதுவரை காஷ்மீரைக் கேட்டதற்காக தாராளமாக மன்னிப்பும் கேட்டதுடன், இனிமேல் கேட்க மாட்டோம் எனவும் சத்தியம் செய்துள்ளனர். பிஹாரையும் சேர்த்துப் பெறும் திட்டம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
கட்ஜு மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலர் தெரிவித்திருந்தனர்.
அதற்கும் கிண்டலாகவே பதிலளித்துள்ளார் கட்ஜு. “ஐக்கிய ஜனதா தளம் பொதுச் செயலாளர் திரு. கே.சி. தியாகி, என் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். நான் இதைவிட அருமையான ஆலோசனை தருகிறேன். பைத்தியகாரச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்” என கட்ஜு ட்விட்டரில் தெரிவித்துள் ளார்.