உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அண்ணா ஹசாரேவை சந்திக்கும் திட்டத்தை கடைசி நேரத்தில் கைவிட்டுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி கடந்த 10- ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் சிஷோதியா கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுவதால் அவரால் அங்கு செல்ல ராலேகான் சித்தி சென்று அண்ணா ஹசாரேவை சந்திக்க முடியாது என்றார். அவருக்குப் பதிலாக கட்சியின் குமார் விஷ்வாஸ், சஞ்சய் சிங், கோபால ராய் ஆகியோர் சென்று அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றார். மேலும், உடல் நலன் சீரானதும் கெஜ்ரிவால் அண்ணா ஹசாரேவை சந்திப்பார் என்றார்.
'வெற்றி கொண்டாட்டத்தில் இருப்பார் கெஜ்ரிவால்'
இந்நிலயில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா ஹசாரே: "கட்சியின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதால் கெஜ்ரிவால் இங்கு வர முடியாமல் போயிருக்கலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை. இரண்டு , மூன்று பேர் வரவில்லை என்றால் அதனால் போராட்டத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது" என தெரிவித்துள்ளார்.