இந்தியா

நவம்பர் 5ல் செவ்வாய் நோக்கி ஏவப்படுகிறது ‘மங்கள்யான்’

செய்திப்பிரிவு

இந்திய செயற்கைக்கோள் ‘மங்கள் யான்’ செவ்வாய்க்கிரக சுற்றுப் பாதைக்கு ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி, பிற்பகல் 2.36 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளத்திலிருந்து மங்கள்யானைச் சுமந்து கொண்டு ஏவுகணை புறப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன் கூறுகையில், ஒத்திகை யின் போது கவுன்ட்டவுன் தொடர்பான அனைத்தும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. எல்லாமே நல்லபடியாக நடக்கிறது. செவ்வாய்க்கிரக சுற்றுப்பாதைக்கு ஏவுகணையச் செலுத்துவதற்கான ஏவுசாளர அவகாசம் (லாஞ்ச் விண்டோ) 5 நிமிடங்கள் மட்டுமே உள்ளது என்றார்.

மங்கள்யான் செயற்கைக் கோளைச் சுமந்து கொண்டிருக்கும் ஏவுகணை ஏவப்பட்டு விட்டால், 25 நாள்கள் அது பூமியின் சுற்றுப் பாதையில் இருக்கும். நவம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாயின் சுற்றுப்பாதை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கும். ஏறக் குறைய 300 நாள்கள் பயணத்தில் வரும் 2014 செப்டம்பரில் தன் இலக்கை அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

‘செவ்வாய் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளின் குறைந்தபட்ச ஆயுள் 6 மாதங்களாகும். இருப்பி னும் மற்ற நாடுகள் அனுப்பிய சில செயற்கைக் கோள்கள் 6, 7 ஆண்டுகள் வரை செயல்பட்டன’ என இஸ்ரோ அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

அரசியல் பின்னணி இல்லை

இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

தேர்தல்களை மனதில் கொண்டே, மத்தியில் ஆளும் அரசுக்குச் சாதகமாக மங்கள்யான் செயற்கைக்கோள் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறு. இதில் அரசியல் பின்னணி எதுவுமில்லை. நாட்டின் பெருமிதத்துக்காகவும், ஆய்வுகளுக்காவும் ஏவப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு விண் வெளித் திட்டங்கள் தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவை எதுவும் அரசியல் காரணங்களுக்காக கட்டமைக்கப்படவில்லை. சந்திரா யன்-1 திட்டம் சாதிக்கப்பட்ட பின் அப்போதைய இஸ்ரோ தலை வர் நிலவுமனிதர் என அழைக்கப் பட்டதாகக் கூறுகிறீர்கள். அதைப்போல நான் செவ்வாய் மனிதன் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, செவ்வாய் திட்டம் எதுவாக இருப்பினும் அது இஸ்ரோ வின் கூட்டுமுயற்சி. இஸ்ரோவின் அங்கமாக, இஸ்ரோ மனிதனாக அறியப்படுவதையே நான் விரும்புகிறேன் என்றார் அவர்.

புவியின் சுற்றுப்பாதைக்கு ஏவப்படும் செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் எந்த நேரத்திலும் ஏவப்படலாம். ஆனால், புவி சுற்றுப்பாதைக்கு வெளியே ஒரு விண்கலத்தை ஏவுவதற்கோ, ஏற்கெனவே விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்டவற்றுக்கோ அல்லது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குறிப்பிட்ட செயற்கைக்கோள் போன்ற வற்றை இலக்காகக் கொண்டு ஏவுவதற்கு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ஏவ முடியும். இந்தக் காலக்கணிப்பு ஏவுசாளரம் (லாஞ்ச் விண்டோ) எனப்படுகிறது. நடப்பாண்டு செவ்வாய் சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோளை ஏவ முடியாவிட்டால் இந்தியா 2016 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT