இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்யாவுடன் ராஜ்நாத் சிங்: சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்டார் திக்விஜய்

பிடிஐ

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்குரை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறிவந்த நிலையில், அதுதொடர்பான புகைப்படம் ஒன்றை அவர் நேற்று வெளியிட்டார்.

இந்தப் படத்தில் பிரக்யா சிங் தாக்குர் அருகில் ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட 4 பேர் உள்ளனர்.

இதுகுறித்து திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரக்யா தாக்குருடன் இருக்கும் பாஜக தலைவர்களை தெரிகிறதா? இதற்கு ராஜ்நாத் சிங்கும், சிவராஜ் சிங் சவுகானும் பதில் சொல்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். என்றாலும் இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

கடந்த 2008-ல் பாஜக எதிர்க் கட்சியாக இருந்தபோது, பிரக்யா சிங்கை ராஜ்நாத் சந்தித்தார் என திக்விஜய் சிங் கூறினார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என பாஜக கூறியது. இந்நிலையில் திக்விஜய் சிங் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

திக்விஜய் சிங் தனது குற்றச் சாட்டை கடந்த காலத்திலும் எழுப்பினார். அதற்கு ராஜ்நாத் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்-ஐ (தீவிரவாதத்தை தூண் டும் வகையில் பேசியதாக மத்திய அரசு இவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது) கடந்த 2012-ல் திக்விஜய் சிங் பாராட்டி பேசும் வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டதை தொடர்ந்து, திக்விஜய் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திக்விஜய் சிங் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “4 ஆண்டுகளுக்கு முன் ஜாகிர் நாயக் உடன் நான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ அது. அப்போது அவர் மீது எந்த வழக்கும் இல்லை. இந்த வீடியோ தேசிய ஊடகத்திலும் 3 நாட்களுக்கு மேல் வெளியாகியுள்ளது.

ஊடகங்களில் உள்ள மோடி யின் பக்தர்களும் ஆர்எஸ்எஸ் சக்திகளும் எப்போதும் என் மீது அன்பு கொண்டு எனக்கு இலவச விளம்பரம் அளிக்கின்றனர். செய்திகளில் எப்போதும் நான் இருக்கும்படி செய்வதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதை பாகிஸ்தானில் இந்தியப் பத்திரிகையாளர் வேத் பிரதாப் வேதிக் சந்தித்து பேசும் புகைப்படத்தையும் திக்விஜய் வெளியிட்டுள்ளார்.

“இந்த விவகாரத்தை நாடாளு மன்றத்தில் எழுப்பினேன். மோடி அரசு பதில் அளிக்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் இடையே கொல்லைப்புற வழியிலான ராஜீய உறவு இல்லாவிடில் ஹபீஸ் சயீதை சந்திக்க பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதித்திருக்காது” என்று திக்விஜ்ய் சிங் கூறியுள் ளார்.

SCROLL FOR NEXT