அருணாசலப் பிரதேசத்தில் சமீபத்தில் இரண்டு முறை சீன ராணுவம் எல்லை மீறி ஊடுருவியிருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பசிகாட் பகுதியில் நவீன இறங்கு தளத்தை வெள்ளியன்று திறந்து வைத்து கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடநத் ஜூலை 22-ம் தேதி அஞ்சா மாவட்டம் கிபிது பகுதியிலும், அதே மாதத்தில் தவாங் மாவட்டம் தங்சா பகுதியிலும் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த செயல்கள் ஊடுருவலோ, தாக்குதல் முயற்சியோ அல்ல. கட்டுப்பாட்டு எல்லை அருகே சீன ராணுவம் வந்தபோது, இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) அறிக்கை அளித்துள்ளது. இதனை ஆய்வு செய்த மத்திய அரசு, இச்செயல் திட்டமிட்ட அத்துமீறல் அல்ல என்பதை உறுதி செய்துள்ளது.
எல்லையில் இந்தியா உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. பசிகாட்டில் அமைந்துள்ள நவீன விமான இறங்கு தளம் அதில் முக்கியமான ஒன்று. எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் சவால் விடுக்கவோ, போட்டியாகவே நாம் நமது எல்லைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவில்லை. நாம் செய்வதெல்லாம் நமது ராணுவத்தை, பாதுகாப்பை வலுப்படுத்துவதுதான். இந்திய விமானப்படைக்கு எல்லையோர மாநிலங்களில் முகாம்கள் நிச்சயம் தேவை.
தவாங்-லும்லா இடைப்பட்ட பகுதியில் 11 ஆயிரம் அடி உயரத்தில் மேலும் ஓர் நவீன இறங்கு தளம் (ஏஎல்ஜி) அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த உயரத்தில், கடினமான தரைப்பரப்பு சவாலாக உள்ளது. அந்த இடம் சாதகமாக இருக்குமா, மாற்றிடம் தேவையா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பசிகாட்டில் பயணிகள் விமானதளம் அமைப்பது குறித்து இந்திய விமான ஆணையம், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.