மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்து மூலம் சுரேஷ் பிரபு அளித்த பதிலில், “நிதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ரயில்வே பட்ஜெட் மூலம் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த முடிவு அவசியமாகிறது என அக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பரிந்துரை மத்திய நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டும் தனித்தனியாக அடுத்தடுத்த நாட் களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கடந்த 1924-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ரயில்வே துறையின் பங்கு பயணி கள் போக்குவரத்தில் 90 சதவீத மாகவும் சரக்கு போக்குவரத்தில் 75 சதவீதமாகவும் இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில், ரயில்வே துறையின் பங்கு பயணிகள் போக்குவரத்தில் 20 சதவீதமாகவும் சரக்கு போக்குவரத்தில் 40 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
எனவே, காலத்துக்கு ஏற்றவாறு ரயில்வே பட்ஜெட்டை மாற்றுவது டன், அந்தத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
ரயில்வே துறையின் பல முக்கியப் பணிகளுக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க முடியாத காரணத்தால் அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பொது பட்ஜெட்டுடன் ரயில் பட்ஜெட்டை இணைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
எனினும் இந்த முடிவுக்கு ரயில்வே ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக் கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது. இப்போது, ரயில்வே துறையை விட ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அதற்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த ஆலோ சனைப்படி பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப் பதற்காக, சில சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டி இருக்கும்.
பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே ‘தி இந்து’ செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.