ஒடிஸா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பிஜு ஜனதா தளக் கட்சியின் எம்.பி. ராமச்சந்திர ஹன்ஸ்தா, 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்களை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
ஒடிஸாவின் மயூர்பஞ்ச் தொகுதி எம்.பி. ராமச்சந்திர ஹன்ஸ்தா. இவரும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுபர்ணா நாயக் (பிஜு ஜனதா தளம்), ஹிதேஷ் குமார் பாகர்தி (பாஜக) ஆகியோர் நாபாதிகன்டா நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாகச் செயல்பட்டனர். இந்த சீட்டு நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தனர். இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குநர் அஞ்சன் பாலியார்சிங், இயக்குநர்கள் பிரதீப் பட்நாயக், கார்த்திக் பரிதா ஆகியோரை கடந்த அக்டோபர் 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து ராமச்சந்திர ஹன்ஸ்தா, சுபர்ணா நாயக், ஹிதேஷ் குமார் பாகர்தி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மூவரும், அந்நிறு வனத்தின் இயக்குநர்கள் பொறுப்பிலிருந்து கடந்த 2012ம் ஆண்டே விலகிவிட்டதாகவும், ஆனால் கடந்த ஆண்டுதான் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதோடு, தங்களை இந்த வழக்கில் அஞ்சன் பாலியார்சிங் சிக்கவைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இதை மறுத்துள்ள அஞ்சன் பாலியார்சிங், “நிறுவனத்தின் நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்றதற்கான அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்” என்றார்.
“குற்றச்சதி, ஏமாற்றுதல், நிதியை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ராமச்சந்திர ஹன்ஸ்தா, சுபர்ணா நாயக், ஹிதேஷ் குமார் பாகர்தி ஆகியோரை கைது செய்துள்ளோம். இந்த மூவரும் நாபாதிகன்டா நிதி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ஆவர்’’ என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ராமச்சந்திர ஹன்ஸ்தா வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ. 28 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒடிஸாவில் மோசடியில் ஈடுபட்டதாக நாபாதிகன்டா உள்ளிட்ட 44 நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.