பிப்ரவரி 1-ம் தேதி நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், நாளை மாலை (செவ்வாய்க்கிழமை மாலை) பட்ஜெட்டுக்கு முன்னதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான டெரக் ஓ பிரெய்ன் கூறும்போது, "மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 1-ம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினம் எந்த தொழிலும் செய்யப்படுவதில்லை. தொழில் சார்ந்த ஆயுதங்களைக்கூட தொடுவதில்லை என்ற பாரம்பரியம் மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மதம் சார்ந்த விழா என்பதைக் காட்டிலும் மேற்கு வங்கத்தில் சரஸ்வதி பூஜை சமூக - கலாச்சார விழாவாகவே கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் கலந்து கொள்ள முடியாது" என்றார்.
"நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்"
பட்ஜெட்டில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் சரவஸ்தி பூஜையே என்று திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டாலும், ரோஸ் வேலி குரூப் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கட்சியின் 2 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதே இந்த புறக்கணிப்புக்குக் காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது.
இதை சுட்டிக்காட்டி நிருபர் ஒருவர் டெரக் ஓ ப்ரெய்னிடம், "பட்ஜெட்டில் கலந்து கொள்ளாததற்கு சரஸ்வதி பூஜையே காரணமா அல்லது இது ஒருவகை புறக்கணிப்பா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டெரக், "அது என்னவாக இருக்கும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்" என்றார்.