ராஜஸ்தான் மாநிலம் டோங்-சவாய் மாதோபூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரே இல்லை, அந்நிய நபர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்து கோபமடைந்துள்ள அசாருதீன், இதுபோன்ற விமர்சங்கள் உபயோகமற்றது என்று கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்தவரான அசாருதீன் கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதனால் மாநிலத்துக்கும், தொகுதிக்கும் அசாருதீன் அந்நியர் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் மேலும் கூறியுள்ளது:
இந்தியாவில் பிறந்த எவரும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணிபுரியலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. அதுபோலவே நான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடுகிறேன். கட்சித் தலைமை எனக்கு ஒதுக்கிய இடத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன்.
நான் இந்தியன்தான். என்னை அந்நியன் என்று கூறுவது உபயோகமற்ற பேச்சு. தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று தொகுதி மக்களுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன். கடந்த 5 ஆண்டுகளாக மொராதாபாத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.