இந்தியா

பாலியல் புகார்: ஊடகங்களுக்கு பத்திரிகை கவுன்சில் உத்தரவு

செய்திப்பிரிவு

பாலியல் குற்றம் சார்ந்த புகார்களை விசாரிப்பதற்கும் அவற்றுக்குத் தீர்வு காணவும் தனியாக குழு ஒன்றை அமைக்கும்படி அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது இந்திய பத்திரிகை கவுன்சில்.

இது தொடர்பாக இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:

ராஜஸ்தானில் சமூக சேவகி ஒருவர் கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் 1997ல் விசாகா வழிகாட்டி நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்தது.

மேலும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய பாலியல் தொல்லைகளை தடுக்கவும் தவிர்க்கவும் தீர்வு காணவும் 2013ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்படியிருந்தும் தமது நிறுவனத்துக்குள்ளேயே வரும் இத்தகைய புகார்களை விசாரிக்க பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் குழு அமைக்கவில்லை.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் தொந்தரவுகள் சம்பந்தமான சட்டத்தின் 4 (1) பிரிவின்படி இத்தகைய கமிட்டி அமைப்பது கட்டாயம்.

பெண் பத்திரிகையாளர்களின் பணி நேரமும் பணியிடமும் பொதுவான நடைமுறைக்கு உட்பட்டதாக இல்லாமல் வேறுபட்டதாகவே இருக்கிறது. இத்தகைய கண்ணோட்டத்தில் பார்த்தால் பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் என்பது பொருள் பொதிந்ததுதான்.எனவே எல்லா ஊடக நிறு வனங்களும் பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார் மார்கண்டேய கட்ஜு.

தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் தருண் தேஜ்பால் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் பத்திரிகையாளர் புகார் கொடுத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பத்திரிகை கவுன்சில் இந்த திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT