பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை சதி பின்னணியில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த வீரேந்திர டாவ்டே இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
வீரேந்திர டாவ்டே ஏற்கெனவே மட்காவோன் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2013, ஆகஸ்ட், 20-ம் தேதி பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறியதை அடுத்து, கடந்த 2014-ல் இவ்வழக்கு விசாரணையை சிபிஐ வசம் மாற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிஐ நரேந்திர தபோல்கர் கொலை சதி பின்னணியில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த வீரேந்திர டாவ்டே இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இவர் மாட்காவோன் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் ஆவார். மேலும், வினய் பவார், சரங் அகோல்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளது. வினய் பவார் 2009-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரது மாதிரி வரைபடமும் அதில் இடம் பெற்றுள்ளது.
2007-ல் கொண்டு வரப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும் பணி தனக்கு வழங்கப்பட்டதாகவும். சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த துர்கேஷ் சன்ஸ்தா அப்பணியை தனக்கு ஒப்படைத்ததாகவும் வீரேந்திர டாவ்டே கூறியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.