தெகல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலின் ஜாமீன் மனு குறித்து 14-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை லிப்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு. அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது ஜாமீன் கோரிக்கை மனு, மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேஜ்பாலுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் முக்கிய சாட்சிகளை தனது செல்வாக்கை பயன்படுத்தி கலைத்துவிடுவார். மேலும், சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் லிப்டின் வெளியே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தேஜ்பாலின் குடும்பத்தினர் தில்லியில் அனைவருக்கும் காட்டி வருகின்றனர். அது அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்று அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
தேஜ்பால் தரப்பு வழக்கறிஞர் வாதம்
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் பொய்யான தகவல்களை கூறுகிறார் என்பது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமே தெளிவாகிறது.
லிப்ட்டில் இருந்து வெளியேறியபோது தேஜ்பால் தன்னை விரட்டி வந்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அப்பெண்தான் தேஜ்பாலை பின்தொடர்ந்து வந்துள்ளார் என்பது கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் அப்பெண், தான் கண்ணீருடன் வெளியே வந்ததாகக் கூறியுள்ளார். மாறாக, மிகவும் மகிழ்ச்சியாக அந்த பெண் இருப்பது வீடியோவில் தெரிகிறது. எனவே தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு பழிவாங்கும் நடவடிக்கை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஜாமீன் மனு மீது இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தேஜ்பாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மார்ச் 14-ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அறிவித்தார்.