இந்தியா

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி: மணிப்பூரில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு

செய்திப்பிரிவு

குடியரசுத் தின விழாவை சீர்குலைக்க மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் 4 இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.

பிரிவினைவாதிகளின் அழைப்பை அடுத்து காஷ்மீரில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஒடிசாவில் மாவோ யிஸ்டுகள் கறுப்புக் கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசு தின விழாவை புறக்கணிக்குமாறு 6 தீவிரவாத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், அந்த அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இம்பால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். ஞாயிற்றுக்கிழமை காலை 8.25 மணியளவில் குடியரசு தின பேரணி நடைபெறவிருந்த காவல் துணை ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள கங்லா பகுதியில் 2 குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து 11 மணியளவில் சிங்மெய்ரோங், சிங்காமாக்கா பகுதிகளில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், யாரும் காயமடையவில்லை. இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான வர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வேலைநிறுத்தத்துக்கு ஹுரியத் மாநாட்டு கட்சியின் (தீவிரவாதப் பிரிவு) தலைவர் சையது அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ஸ்ரீநகர் பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது.

இதேபோன்று மேகாலயம் மாநிலத்தில் பிரிவினைவாதத்தை வலியுறுத்தி போராடி வரும் தீவிரவாதிகள், குடியரசு தின விழாவை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ஒடிசாவில் குடியரசு தின விழாவை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், பலத்த பாதுகாப்புக்கு இடையே எந்தவிதமான அசம்பாவிதமின்றி விழா கொண்டாடப்பட்டது. சித்ரகோண்டா, காளிமேளா பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கறுப்புக் கொடி ஏற்றிவைத்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் சேகர் தத் பேசுகையில் “நக்ஸலைட்டுகளை ஒடுக்கும் பணியை மாநில அரசு தீவிரமாக மேற்கொள்ளும். பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்” என்றார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த ஆண்டுகளில் சிவாஜி பூங்கா மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த முறை மெரைன் டிரைவ் பகுதியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சல்மான் கான், சுஷ்மிதா சென் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT