பெங்களூரில் போதிய பாதுகாப்பு இல்லாத 1000க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களை காவல்துறை மூடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 19-ம் தேதி காலை 7.30 மணியளவில் பெங்களூர் மாநகராட்சி சதுக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ஜோதி உதய் (58) என்ற வங்கி பெண் ஊழியர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம்மில் புகுந்த ஒருவர், ஷட்டரை மூடிவிட்டு ஜோதி உதயை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜோதி உதய், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், போதிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத 1000க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களை காவல்துறையினர் இன்று மூடினர். ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீராய்ந்து அவற்றை சரி செய்ய காவல்துறை விதித்திருந்த கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்த்து. இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் அவகாசம் கோரி வங்கிகள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை காவல்துறை நிராகரித்து விட்டது.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் ராகவேதிர எச் அவுரத்கர் கடந்த வியாழக்கிழமை, வங்கிகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப ஏடிஎம் பாதுகாப்பை நவ. 24-க்குள் அதிகரிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.