இந்தியா

மோடி முடிவால் சாமானியர்களுக்கு மிகப் பெரிய பலன்: முகேஷ் அம்பானி நம்பிக்கை

பிடிஐ

மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், சாமானியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பலன்கள் கிட்டும் என்று நாட்டின் செல்வந்த தொழிலதிபர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார்.

ஜியோ சிம் இலவச சேவைகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு அறிவிப்பை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கூறிய கருத்துகள்:

"500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற வரலாற்று சிறப்புமிக்க துணிச்சல் பிரதமர் மோடி அறிவித்தது பாராட்டுக்குரியது.

நம் பிரதமர் தனது நடவடிக்கையின் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த ரொக்கப் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறுவதற்கான சாத்தியத்தை வலுப்படுத்தியிருக்கிறார்.

இந்த மாற்றத்தால் டிஜிட்டல் தொழில்நுட்ப பரிவரித்தனைகள் மூலம் நேர்மையானதும் வெளிப்படையானதுமான வலுவான இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

மேலும், இந்த மாற்றத்தால் சாமானிய மக்கள் மிகப் பெரிய அளவில் பலன்களைப் பெறுவர் என்று நம்புகிறேன்.

எதற்காகவும் வரிசைகளில் நிற்பதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் செலுத்துவதற்கும் கூட அவசியமில்லாத சூழல் உருவாகும்.

பிரதமர் மோடி எடுத்து வைத்துள்ள முதல் அடியிலேயே பயனற்றுக் கிடந்த பணத்தை ஆக்கபூர்வமானதாக கொண்டுவந்திருக்கிறார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நாடுவதன் மூலம் நம் விவசாயிகள், சிறு வணிகர்கள், தினக் கூலித் தொழிலாளர்களுக்கு போதிய கடன்களை அளித்து பலன் பெற வழிவகுக்கலாம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் டிஜிட்டல் இந்தியா என்ற கனவுக்கு விதையிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மேற்கொண்ட நம் பிரதமரை ஒவ்வொரு இந்தியருடன் இணைந்து மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்" என்றார் முகேஷ் அம்பானி.

SCROLL FOR NEXT