இந்தியா

சிவசேனை கட்சி வேட்பாளர் கோலப்பிற்கு 3 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் சிவசேனை சார்பில் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளவரும் மகாராஷ்டி மாநில முன்னாள் அமைச்சருமான பபன்ராவ் கோலப்பிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பபன்ராவ் கோலப் தற்போது நாசிக் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் 1995-ம் ஆண்டு பாஜக – சிவசேனை கூட்டணி ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 1999-ம் ஆண்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1999-ம் ஆண்டு மிலிந்த் யாவட்கர் என்பவர் கோலப் மீது நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி, 2001-ம் ஆண்டு கோலப்பிற்கு எதிராக ஊழல் எதிர்ப்பு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோலப்பும் அவரது மனைவி சசிகலாவும் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு வருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிப்ப தாக நீதிபதி ஏ.வி. தவுலதாபட்கர் கூறினார்.

எனினும் இருவருக்கும் ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் விரைவில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் சிவசேனை கட்சி சார்பில் ஷிர்டி மக்களவைத் தொகுதியில் பபன்ராவ் கோலப் போட்டியிடவிருந்தார். நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டார்.

SCROLL FOR NEXT