சுமார் 4000 மொபைல் எண்களின் விவரங்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளன. இதை பணத்துக்காக விற்கும் கும்பலின் 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள உபியில் இருந்து பேசப்படும் மொபைல் எண்களில் இருந்து யாருக்கு பேசப்பட்டன என்றும், இந்த பேச்சு எந்தெந்த தேதிகளில் எவ்வளவு நேரம் நீடித்தது போன்ற விவரங்களை சி.டி.ஆர்(கால் டிடெய்ல் ரெக்கார்ட்) என அழைக்கிறார்கள்.
இவை, பி.எஸ்.என்.எல் மற்றும் தனியார் மொபைல் நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் விவரங்கள், குறைந்தபட்சம் அப்பகுதியின் உதவி ஆணையர் அல்லது மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அனுமதி இன்றி எவருக்கும் கிடைக்காது. எனினும், இதன் பணியாளர்கள் உதவியால் சிலசமயம் மொபைல் எண் விவரங்கள் வெளியில் கசிய விடப்பட்டு விடுகின்றன. இவை, திருமணங்கள், தம்பதிகள் உறவு, அரசியல் விரோதம், உயர் அதிகாரிகள் மீதான உளவு, தொழில் மற்றும் வியாபாரப் போட்டிகள் உட்படப் பலவற்றிற்கும் உதவியாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனவே, துப்பறியும் தனியார் உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலமாக இந்த விவரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருப்பது டெல்லி போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. இதை ரகசியமாகக் கண்காணித்து வந்த போலீஸார் நேற்று பங்கஜ் திவாரி, ஜெய்வீர் ராத்தோர், ஆதித்ய சர்மா எனும் அர்பித் சர்மா, சஞ்சீவ் சவுத்ரி மற்றும் உபியில் கான்ஸ்டபிளான நரேந்திர குமார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் சிபிஐ அலுவலர், பத்திரிகையாளர் மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனத்தார் ஆகியோர் உள்ளனர்.
இது குறித்து டெல்லி குற்றப்பிரிவின் இணை ஆணையரான ரவிந்திரா யாதவ் கூறுகையில், ‘டெல்லி ஜனக்புரியிலுள்ள ஸ்கார்பியன் வெரிபிகேஷன் அண்ட் கன்சல்டண்ட் லிமிடெட் எனும் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 5000 முதல் 30,000 வரை சிடிஆர்களை விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்தன. இவரை கண்காணித்து வந்த போது கையும் களவுமாக சிக்கினார். இவர் மூலமாக மற்ற மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கான்பூர் காவல் நிலைய கான்ஸ்டபிள் மூலமாக கடந்த இருவருடங்களாக சி.டி.ஆர்களை பெற்று வந்துள்ளனர்.’ எனத் தெரிவித்தார்.
.இதுபோல், மொபைல்களின் சிடிஆர்கள் திருட்டு போவது முதன் முறையல்ல. இதற்கு முன் கடந்த 2013-ல் அப்போதைய மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவரான அருண்ஜேட்லியின் மொபைல் எண் விவரங்கள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கைதாகி ஜாமீனில் விடப்பட்ட சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ஆதித்ய சர்மா ஆகிய இருவர் மீண்டும் கைதாகி உள்ளனர். இவர்கள் கான்பூரின் டிஐஜி அலுவலகத்தில் மொபைல் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஜெய்வீர் சிங் ராத்தோர் மூலமாக சிடிஆர்களை பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகள் கலக்கம்
சிடிஆர் திருட்டில் தங்கள் மொபைல் எண் விவரங்களும் திருடப்பட்டுள்ளதா என டெல்லி மற்றும் உபி அரசியல்வாதிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள், சிடிஆர் வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸாரிடம் திருடப்பட்ட சிடிஆர்களில் தம்முடைய எண்கள் உள்ளதா என ரகசியமாக விசாரித்து அறிய முற்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.