இந்தியா

மக்களை பிளவுபடுத்துகிறது பாஜக: பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது, அந்தக் கட்சியால் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.

அசாம் மாநிலம், கும்டாய் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பல்வேறு மதங்கள், கலாசாரம், மொழிகள் கொண்டது இந்தியா. இதில் மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாட்டில் வளர்ச்சி யை ஏற்படுத்த அந்தக் கட்சிக்கு தனிப்பட்ட கொள்கைகள் கிடையாது.

மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. எங்களது பொரு ளாதார சீர்திருத்தங்கள், சமூக நலத் திட்டங்களை மக்கள் நன்கறிவார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து 2009-ம் ஆண்டில் காங்கிரஸுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். வரும் மக்களவைத் தேர்தலிலும் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் எங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்காக உழைத்துள்ளோம். பல்வேறு துறைகளில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இருப்பினும் இன்னும் சிறப்பாகச் செயல் பட்டிருக்கலாம் என்ற ஏக்கமும் எனக்குள் இருக்கிறது.

கடைசி மூன்று ஆண்டுகளில் சில பொருளாதார பிரச்சினைகள் எழுந்தன. அவற்றை மத்திய அரசு வெற்றிகரமாக சமாளித்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் திறம் வாய்ந்த ஆட்சியால் பொருளா தார ரீதியில் உலகின் வேகமாக வளரும் நாடுகள் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு தொடர்ந்தால் உலகில் மிக அதிவேகமாக வளரும் நாடுகள் வரிசைக்கு இந்தியா முன்னேறி விடும்.

பொருளாதார வளர்ச்சி இல்லை யெனில் வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமாகாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது, சாமானிய மக்கள் பின்தங்கிவிடுவார்கள். இதை கருத்திற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கிராமப்புறங்களில் 2 லட்சம் கி.மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தீவிர போலியோ தடுப்பு நடவடிக்கைகளால் போலியோ இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு 40 ஆண்டுகள் பல்வேறு அரசுப் பதவிகளில் பணியாற்றியுள்ளேன். அதைத் தொடர்ந்து நீங்கள் என்னை பிரதமராக தேர்ந்தெடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எங்கிருந்தாலும் இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன்.

SCROLL FOR NEXT