இந்தியா

பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: பட்டப்பகலில் காங். பிரமுகர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

பெங்களூருவில் காரில் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஹெலஹங்கா பகுதியைச் சேர்ந்தவர் கடுபளே சீனிவாஸ் (எ) தாபா சேனா (46). காங்கிரஸ் பிரமுகரான இவர் கர்நாடக வேளாண் பொருட்களின் சந்தை குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். நேற்று பிற்பகல் ஹெலஹங்காவில் இருந்து கோகிலு நோக்கி தனது நண்பர்களுடன் சீனிவாஸ் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் சீனிவாஸை நோக்கி 6 முறை சுட்டனர். இதில் காரின் முன் இருக்கையில் இருந்த சீனிவாஸ், ரமேஷ், தர் உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்வதேச விமான நிலைய சாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்தும் முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த சீனிவாஸ் மற்றும் அவரது நண்பர்களை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த பெங்களூரு மாநகர போலீஸ் ஆணையர் பிரவீன் சூட், ‘‘மர்ம நபர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. படுகாய மடைந்த சீனிவாஸ் மீது 13 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே இரு ரவுடி கும்பலுக்கு இடையே இந்த மோதல் நடந்ததா? அல்லது அரசியல் காரணங்களுக்காக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

பெங்களூருவில் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடத்தை ‘சீல்’ வைத்து விசாரணை நடத்திய போலீஸார்.

SCROLL FOR NEXT