உத்தரப் பிரதேச கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இவர்கள் மக்களவை தேர்தலில் அரசியல் தலைவர் களைக் குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இவர்களிடம் இருந்து இரு ஏகே-47, 4 கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் சில முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் களில் ஒருவருக்கு பர்கத், உவைஸ், முஜாம்மில் போன்ற பெயர்களும் மற்றொரு வருக்கு முர்தஜா என்பது உள்பட வேறு பெயர்களும் இருப்பதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானின் மூல்தானை சேர்ந்த இவர்கள் தலிபான் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது விசாரணையில் தெரியவந் துள்ளது.
ஏப்ரல் 10-ல் தொடங்கி 6 கட்டங்களாக உ.பி.யில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் பிரச்சார கூட்டங்களில் இவர்கள் மனிதவெடிகுண்டுகளாக மாறி, தாக்குதல் நடத்த திட்டமிட்டி ருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக, கோரக்பூரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள வாரணாசியில் நரேந்திர மோடியை குறி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் உ.பி. தீவிரவாத எதிர்ப்புப் படையினரின் விசாரணைக்காக தலைநகர் லக்னோ கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, தீவிரவாத எதிர்ப்பு படையினர் தங்கள் காவலில் விசாரணைக்கு எடுப்பார்கள்.
இது குறித்து உ.பி. தீவிரவாத எதிர்ப்புப்படை வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘இவர்களை படம் எடுத்து ஏற்கனவே கைதாகி டெல்லியின் சிறப்பு போலீஸார் விசாரணையிலுள்ள தீவிரவாதிகளிடம் காட்டப்பட்டது. அதில், இருவரையும் தனது சகாக்கள் என பாகிஸ்தானை சேர்ந்தவரான வகாஸ், அடையாளம் காட்டியுள்ளான்’ என்று தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவதுபோல நேபாளம் வழியாகவே இவர்கள் உ.பி.யில் நுழைந்துள்ளனர்.
15 நாட்களாக கோரக்பூரில் தங்கி தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.