விளையாட்டு அமைப்புகளின் முக்கியப் பொறுப்புகளில் அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று ராஜீவ் காந்தி கேல் அபியான், தேசிய இளையோர் திட்டம் 2014 ஆகியவற்றை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது: நாம் விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம். அத்துறையில் உள்ள சாதனையாளர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும்
அதிகாரத்தைக் கொடுக்கும்போதும், அவர்களை விளையாட்டுத் துறையின் முக்கியப்பொறுப்புகளில் நியமிக்கும்போதும்தான் அத்துறையில் புதிய சாதனைகளை எட்ட முடியும்.
இங்கு விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் பலரும் முக்கியப் பதவிகளில் உள்ளனர். இந்த நிலையை மாற்றி விளையாட்டுத் துறையை அதன் இயல்பான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
அரசியல் துறையிலும் இதேபோல மாற்ற வேண்டும். சாமானிய மனிதர்களின் மேம்பாடுதான் நாட்டின் நல்ல அரசியல் மாற்றத்துக்கு வழி வகுக்கும். நாட்டின் அரசியல்சூழ்நிலையில் முன்னேற்றம் வேண்டுமென்றால், இளைஞர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் அரசியலில் ஆர்வம்காட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், விளையாட்டு வீரர்கள் விஜேந்தர் சிங், மேரி கோம், பி.கோபிசந்த், அஸ்வின் நாச்சப்பா, ரஞ்சன் சோதி, கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.