இந்தியா

தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு

செய்திப்பிரிவு

தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு வழக்கை விசாரிக்க மறுத்து நீதிபதி நாகேஸ்வர ராவ் விலகியுள்ளார்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த மே 1-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளித்து கடந்த மே 24-ம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி, சமூக ஆர்வலர் ஆனந்த்ராய் வழக்கு தொடர்ந்துள்ளார். சில மாநிலங் களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வந்ததன் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்று அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிக்க மறுத்து நாகேஸ்வர ராவ் விலகினார். அவர் சமீபத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றவர். அவர் வழக்கறிஞராக இருந்த போது, இதே வழக்கில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராகி இருப்பதால், வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விலகியுள்ளார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி விலகியிருப்பதால், இந்த முடிவு தலைமை நீதிபதிக்கு அனுப் பப்படும். அவர் வேறு ஒரு நீதிபதியை நியமிப்பார். நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வில் அவர் இடம்பெற்று நாளை வழக்கை விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT