புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலுமிருந்து 215-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது பிரியங்கா காந்தி சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி குறித்து ‘கோமிய நிபுணர்’ என்ற விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
அந்த வகையில் நாலந்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சச்சின் சதுர்வேதி, நிதி ஆயோக் முன்னாள் தலைவர் ராஜீவ் குமார், யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் டி.பி. அகர்வால் உள்ளிட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், நாடாளுமன்ற விவாதங்களில் விமர்சனங்கள் நாகரிகமாகவும், தர்க்கரீதியாகவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், இந்தியாவின் முதல் தொழில்முறை நுண்செயலி உருவாக்கத்தில் முக்கியப் பங்கும் வகித்த ஒரு கல்வியாளரை, அரசியல் கேலிக்காக இத்தகைய சொல்லாடல்களால் குறிப்பிடுவது இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களின் கண்ணியத்தைக் குறைப்பதாக அமையும் என கல்வியாளர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, ஜனவரி 2025-இல் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய பேராசிரியர் காமகோடி, பசு கோமியத்தில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்துப் பேசியது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. இதற்குப் பதிலளித்திருந்த காமகோடி, அறிவியல் பூர்வமாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையிலேயே தாம் பேசியதாக குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.