பயங்கரவாத வலைப்பின்னல்கள் தங்கள் செயல்பாடுகளை நவீனமயமாக மாற்றி வரும் சூழலில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை மேலும் இறுக்கமாக, வலுவாக வடிவமைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற விசாரணை முகமைகளுக்கான தேசிய மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
மத்திய அரசு பயங்கரவாதத்திற்கு கடும் தண்டனை மற்றும் எதிர்ப்புச் சட்டங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது, ரகசிய உளவு நடவடிக்கைக்கும் சட்டப் பாதுகாப்பு அளிக்கவும் முடிவெடுத்துள்ளோம். மேலும் உளவுத்துறையினர் சேகரித்த தகவல்களை சாட்சியமாக பயன்படுத்துவது, உட்பட பயங்கரவாதத்தை ஒழிக்க கடும் சட்டங்கள் இயற்ற பரிசீலித்து வருகிறோம்.
பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் புதிய அச்சுறுத்தல்கள் தோன்றியுள்ளன, இந்தச் சவால்களை சந்திக்க இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை அணி (CERT-IN), மற்றும் உயர் தொழில்நுட்ப கணிப்பொறி வளர்ச்சி மையம் (C-DAC) போன்றவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.
அதே போல் குற்ற நடவடிக்கைகள் சட்டத்தில் பரஸ்பர சட்ட உதவி மூலம் பெறப்படும் சாட்சியங்களை ஏற்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.
அதே போல் அடக்குமுறைக்கு உள்ளாகும் தலித் சமூகத்தினர் தயக்கமின்றி காவல்துறையை அணுகுவதற்கான சூழலையும் நடப்பு ஆட்சி உருவாக்கியுள்ளது. மேலும் எஸ்சி/எஸ்டி மீதான வன்முறைகள் தடுப்புச் சட்டத்தில் 2014-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு மேலும் சிலவற்றை குற்றங்களாகச் சேர்த்துள்ளோம்.
விசாரணையின் தரத்தை மேம்படுத்தவும் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் போலீஸ் நடவடிக்கை முழுதும் கணினிமயப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அரசு அக்கறை கொண்டுள்ளது. இதற்காகவென்றே நாட்டில் 564 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விசாரணைக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு விசாரணையாளர்கள் பெண்கள். இதற்கான நிதிகள் மத்திய-மாநில கூட்டணியின் அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்த கிளைகள் மீது மத்திய அரசு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
தேசிய குற்றப்பதிவேடு கழக புள்ளி விவரங்களின்படி குற்றம்சாட்டப்படுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, இதனால்தான் விசாரணையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்கள் காவல் நிலையங்களில் கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் விசாரணைக்கு அழைக்கும்போது அவர்களுக்கு சவுகரியமான நேரத்தைக் கடைபிடிக்கப்பட வேண்டும், மேலும் விசாரணை எந்த மட்டத்தில் உள்ளது என்பது பாதிக்கப்பட்டோருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார் ராஜ்நாத் சிங்.