இந்தியா

6 நாள்களுக்குப் பிறகு உ.பி. டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேசத்தில் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்த ஜூனியர் டாக்டர்கள் (மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள்) 6 நாள்களுக்குப் பிறகு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இது குறித்து கான்பூர் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஆர்த்திலால் சந்தானி ‘தி இந்து’விடம் கூறுகை யில், “மருத்துவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை வியாழக்கிழமை இரவு அரசு அழைத்துப் பேசி, மாணவர்கள் மீதான வழக்கு கள் வாபஸ் பெறப்படும் என உத்தரவாதம் அளித்தது. மேலும் சிறையில் இருந்த 24 மாணவர்களையும் விடுவித்துள் ளது. எனவே, போராட்டம் வாபஸ் பெறப் பட்டது” என்றார்.

எனினும் தொடர்புடைய எம்எல்ஏ மற்றும் எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என லக்னோவின் கிங் ஜார்ஜ், கான்பூரின் ஜி.எஸ்.வி ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்த பின்னணி

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சமாஜ்வாதி கட்சியினருடனான மோதலை அடுத்து, கான்பூரின் ஹேலட் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய வேலை நிறுத்தம் உ.பி. முழுவதும் பரவியது. மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். தடியடிக்கு உத்தரவிட்ட கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யஷஸ்வி யாதவ் மற்றும் சம்பவத்திற்கு காரணமான சமாஜ்வாதி எம்.எல்.ஏ இர்பான் சோலங்கியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கலவரம் மீது நீதிமன்ற விசாரணை வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளுடன் போராட்டம் தொடர்ந்தது.

இதனால், 25-க்கும் மேற்பட் டோர் சிகிச்சை கிடைக்காமல் இறந்ததாக கூறப்பட்டதால், உ.பி. முதல்வர், பணிக்கு திரும்பாதவர்கள் மீது “எஸ்மா” சட்டம் பாயும் என அறிவித்தார்.

முன்னதாக, உ.பி.யின் அலகா பாத் உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில், கான்பூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரை மாற்றிய துடன், விசாரணை கமிஷனும் அமைத்தது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என உத்தரப்பிரதேச அரசு உத்தரவாதம்.

SCROLL FOR NEXT