மஹாராஷ்டிராவின் கோயில் நகரமான பண்டரிபுரத்தில், உலகின் மிகப்பெரிய கழிப்பறை வளாகம் உருவாகிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்பூர் எனப்படும் பண்டரிபுரத்தில் பாண்டு ரங்கன் (விட்டலர்) கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் முக்கிய வைணவத் திருத்தலங் களில் ஒன்றான இக்கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சுலப் இன்டர்நேஷனல்
சுமார் 3 லட்சத்துக்கும் மேற் பட்ட பக்தர்களின் கழிப்பிட வசதிகளுக்காக, ‘சுலப் இன்டர் நேஷனல்’ சார்பில், பண்டரிபுரத்தில் எட்டு ‘மெகா’ கழிப்பறை வளாகங்கள் (டாய்லெட் காம்ப் ளக்ஸ்) கட்டப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 1,417 கழிப்பிடங்கள் உள்ளன.
‘இதுவரை, முதல் 2 கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு இறுதிக்குள் 2,858 டாய்லெட்டுகள் கட்டி முடிக்கப் படும்’ என, சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பதாக் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘இதுவே உலகின் மிகப்பெரிய கழிப்பிட வசதியாக கருதப்பட வேண்டும். தற்போது சீனாவில் 1,000 கழிப்பிடங்கள் கொண்ட வளாகமே உலகின் பெரிய கழிப்பறை வளாகமாக உள்ளது. தற்போது அதைவிட பெரியதாக, பண்டரிபுரத்தில் உருவாக்கப் பட்டுள்ளது’ என்றார்.
ஒவ்வொன்றும் 3 மாடிகள் கொண்ட 8 வளாகங்களும் முழு மையாக கட்டி முடிக்கப்பட்டால், தினசரி 1.5 லட்சம் பேர் இங்கு கழிப்பிட வசதிகளை பயன்படுத்த முடியும். இவ்வளாகத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேர் குளிப்பதற்கும் வசதிகள் உள்ளன.
தவிர, உடை மாற்றுவதற்கும், பொருட்களை பாதுகாப்பாக வைக்க ‘லாக்கர்’ வசதிகளும் இங்கு உண்டு. இத்திட்டத்துக்கு மாநில அரசு நிதியுதவி வழங்கி, முழு ஆதரவும் அளிப்பதாக, பதாக் குறிப்பிட்டார்.
‘பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2019-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 12 கோடி கழிப்பிடங்கள் அமைக்க அதிக நிதி தேவை. மத்திய, மாநில அரசுகளால் மட்டும் இதை செயல்படுத்த முடியாது. மிகப்பெரிய இந்த பொறுப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரதான பங்காற்றலாம்’ என்றும் அவர் கூறினார்.