தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையிலான 2-வது ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு நிலவரம் உட்பட இதர சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இரு நாடுகளும் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. எனவே, இது தொடர்பான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். மேலும் இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும்போது, நிறுவனங்களின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
ஜான் கெர்ரி பேசும்போது, “பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் இணையதள தகவல் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான உறவை இரு நாடுகளும் மேம்படுத்திக் கொண்டுள்ளன. இணையதள தகவல் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக, இதுதொடர்பான ஒப்பந்தத்தை உடனடியாக இறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.