டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் பிரியங்கா வதேரா பங்கேற்றார். வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அவர் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டில் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்தன் துவிவேதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் பிரியங்கா வதேராவும் பங்கேற்றார்.
சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிரசார சுற்றுப் பயணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரியங்கா போட்டி?
தனது தாயார் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் மட்டுமே பிரியங்கா வதேரா இதுவரை பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் ரேபரேலியில் தவறாது ஆஜராகிவிடும் அவர் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயாருக்காக வாக்கு சேகரிக்கிறார்.
கடந்த 2012-ம் ஆண்டில் சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் சோனியாவுக்குப் பதிலாக ரேபரேலி தொகுதியில் பிரியாங்கா போட்டியிடக்கூடும் என்றும் செய்திகள் கசிந்து வருகின்றன. எனினும் இந்தத் தகவலை கட்சி வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தின் கடைசி நேரத்தில்தான் பிரியங்கா வந்தார் என்றும் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே அவர் அங்கிருந்தார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி கூறியபோது, பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அவர் கட்சியின் உறுப்பினர், தனது அரசியல் கருத்துகளை மூத்த தலைவர்களுடன் அவர் அவ்வப்போது விவாதிப்பது வழக்கம். அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர் கூட்டத்தில் பங்கேற் றதில் வியப்பேதும் இல்லை என்று தெரிவித்தார்.