இந்தியா

காஷ்மீர் வன்முறை பலி 23 ஆக அதிகரிப்பு: 3-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடக்கம்

பிடிஐ

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி என்கவுன்டரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கடுமையான வன்முறை வெடித்தது. பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் நடந்த சண்டையில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இன்றும் (திங்கள்கிழமை) கூட நிறைய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 3-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் பலியான இருவரின் அடையாளம் தெரிந்தது. இருவரும் குல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் 22 வயது பெரோஸ் அகமது மிர், மற்றொருவர் குரிஷித் அகமது மிர் (38) ஆகியோர்களாவர்.

தெற்கு காஷ்மீரில் போதிய அளவு செய்தித் தொடர்பு வசதிகளின்மையால் இந்த இருவரின் அடையாளம் தெரியாமல் இருந்தது. தெற்கு காஷ்மீரில் மொபைல் தொலைபேசி இணைப்புகள் வெள்ளிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டன.

வன்முறை, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றிற்கு போலீஸார் உட்பட பலியானோர் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகர் உட்பட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவில்லை. ஆர்பாட்டத்தை தடுக்க பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

மொபைல், இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பிரிவினைவாதக் குழுக்களும் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் கூடுதலாக சில மாவட்டங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளன.

கடைகள், அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள், மற்றும் அரசு அலுவலகங்களில் வருகை மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

பொது போக்குவரத்து வாகனங்கள் முற்றிலும் ஓடவில்லை, ஒரு சில இடங்களில் தனியார் வாகனங்களே சென்று கொண்டிருந்தன. கோடை விடுமுறை என்பதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை.

பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி ஷா கீலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக், மொகமது யாசின் மாலிக் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி (21) கடந்த 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து வடக்கு, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT