குஜராத் மாநிலம், உனா நகரில் இறந்த பசுவின் தோலை உரித்ததாகக் கூறி தாக்கப்பட்ட தலித் இளைஞர்களின் குடும்பத்தினரை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தலித் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது.
உனா சம்பவம் மட்டுமே தலித்துகளுக்கு எதிரான அத்துமீறல் இல்லை இதுபோன்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
உனா சம்பவம் காவல் நிலையத்துக்கு அருகேயே நடந்துள்ளது. அப்படியென்றால் அரசு நிர்வாகம் இத்தகைய அத்துமீறல்களை ஆதரிக்கிறது என்றுதானே அர்த்தம்.
தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளை குஜராத் அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் அரசுக்கு நல்லதொரு பாடம் கற்பிப்பார்கள்" என்றார்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.