இந்தியா

டெல்லியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: அர்விந்த் கேஜ்ரிவால்

செய்திப்பிரிவு

"டெல்லி சட்டப்பேரவைக்கு நாங்கள் தேர்தலை நடத்தவே வலியுறுத்தி வருகிறோம். மீண்டும் ஆட்சி அமைக்க முனையவில்லை" என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் பாஜக நேர்மையற்ற முறையில் ஆட்சியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், அங்கு தேர்தலை நடத்தவே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "நான் தெளிவாகவே கூறிவிடுகிறேன்... ஆம் ஆத்மி கட்சி அனைத்துக் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறது. சுயேட்சை வேட்பாளர்கள் முதலாக காங்கிரஸ் மற்றும் பாஜகவில் உள்ள சில நேர்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு கூறும்போது டெல்லியில் நாங்கள் மீண்டும் ஆட்சியமைக்க முயல்வதாக கருதவேண்டாம்.

நேர்மையற்ற முறையில் பாஜக அங்கு ஆட்சி அமைக்க முயற்சி செய்வதைத் தடுக்க விரும்புகிறோம். மீண்டும் டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம்.

இப்போது அவர்கள் ஆட்சி நடக்கிறது, அவர்கள் ஆளுநர் இருக்கிறார், 7 எம்.பி.க்கள் உள்ளனர், பிறகு ஏன் தேர்தலைச் சந்திக்க அஞ்சுகின்றனர்?

ஆளுநரின் அரசியல் சாசன பொறுப்பை வலியுறுத்துகிறோம், அரசியல் சாசனத்திற்கு எந்த வித இழுக்கும் வந்து விடக்கூடாது. நாளை நாங்கள் ஆளுநரைச் சந்தித்து பாஜகவின் குதிரை பேர சி.டி.யை அளிக்கவுள்ளோம்,

மேலும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தை உடனடியாக வாபஸ் பெறவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பாஜக எப்படியாவது டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதை நாங்கள் டெல்லி மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப் போகிறோம். ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்போகிறோம்” என்றார் அர்விந்த் கேஜ்ரிவால்.

SCROLL FOR NEXT