இந்தியா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க கோரும் மனு மீது ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இரா.வினோத்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்கக் கோரும் கர்நாடக அரசின் மறு சீராய்வு மனு மீது ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து சசிகலா, சுதாகரன் உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த‌ 21-ம் தேதி கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாடில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தது. இது தொடர் பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் ஜெயலலிதாவின் பெயர் விடுவிக்கப்பட்டு, தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையின்போது இறந்தால் மட்டுமே அவரது பெயரை வழக் கில் இருந்து விடுவிக்க முடியும். ஆனால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் நிறை வடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்ட நிலையில் கடந்த‌ டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். உச்ச நீதிமன்ற விதிமுறைகள் - 2013 மற்றும் அரசமைப்பு சட்டத்தின்படி அவரது பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது. அதே நேரம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க முடியும். ஊழல் வழக்கில் தண்டிக் கப்பட்ட பொது ஊழியரிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண் டும் என ஊழல் தடுப்பு சட்டமும் கூறுகிறது. எனவே ஜெயலலிதா வுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் விட்டு அபராதத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தது.

இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வரும் ஏப்ரல் 5-ம் தேதி கர்நாடக அரசின் மனு மீது விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால் ஜெய லலிதா தரப்பு, கர்நாடக அரசின் மனுவுக்கு பதில் அளிப்பது தொடர் பான ஆலோசனையில் ஈடுபட் டுள்ளது. இதேபோல சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸா ரும் இவ்வழக்கில் இணைவது தொடர்பாக யோசித்து வருவதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT