வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கேரள பொதுப்பணித் துறை செயலாளர் டி.எஸ். சூரஜை அம்மாநில அரசு நேற்று சஸ்பெண்ட் செய்தது.
சூரஜுக்கு சொந்தமான 5 இடங் களில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த வார தொடக்கத்தில் சோதனை நடத்தினர். மேலும் சூரஜிடம் நேற்று முன்தினம் கொச்சியில் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறும்போது, “சட்டம் அதன் கடமையை செய்யும்” என சுருக்கமாக முடித்துக்கொண்டார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக கேரள அரசு கடும் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை. உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, “இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. சூரஜுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன” என்றார்.
இந்நிலையில் இப்பிரச்சினையை சட்டரீதியில் எதிர்கொள்ளப்போவதாக டி.எஸ்.சூரஜ் கூறினார். “கடந்த 35 ஆண்டுகளாக அரசு அதிகாரியாக உள்ளேன். பல விஷயங்கள் எனக்குத் தெரியும். உரிய நேரத்தில் அவற்றை வெளிப் படுத்துவேன்” என்றும் அவர் கூறினார்.