மூணாறு சுற்றுலா சென்றபோது, சைக்கிளில் சென்ற கணவன் பின்னால் மனைவி ஓட்டிச் சென்ற கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அசோக் சுகுமாறன் நாயர், தனது மனைவி ரேஷ்மி மற்றும் குழந்தைகள் ஸ்ரேதா (7), ஸ்ரேயா 5) ஆகியோருடன் மூணாறுக்கு சுற்றுலா சென்றார். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார்.
சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அசோக், கடந்த சனிக்கிழமை இயற்கையை ரசித்தபடியே வாகுவரை எனும் இடத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகள் காரில் வந்து கொண்டிருந்தனர். மனைவி ரேஷ்மி காரை ஓட்டியுள்ளார்.
அப்போது, கார் ஸ்டீரியோவில் அதிக சப்தம் வைத்து குழந்தைகள் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சப்தத்தை ரேஷ்மா குறைக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அசோக் மீது மோதியது. இதையடுத்து, அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து ரேஷ்மியால் மீளமுடியவில்லை.
இச்சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.