இந்தியா

எம்.பி.க்களுக்கு விமானப் பயணங்களில் கூடுதல் சலுகை: மத்திய அரசின் உத்தரவால் சர்ச்சை

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என தனியார் விமான சேவை நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு, சமகாலத்திற்கு பொருந்தாத ஒன்று என முக்கிய கட்சித் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "இப்போதுள்ள அரசியல் சூழலில் இப்படிப்பட்ட சிறப்புச் சலுகைகளை கேட்பது, யதார்த்ததோடு அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையே காட்டுகிறது" என சாடியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "எந்தவித கட்டணமும் இல்லாமல் அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வேண்டுமாம். பழக்கங்களும், மனநிலைகளும் அவ்வளவு சீக்கரம் மாறாது. வரிசையில் நிற்காமால், கையில் எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கேட்கிறார்கள் போலும்.

சுவிட்சர்லாந்தின் அதிபர் சூப்பர் மார்கெட்டில் அவரே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியதை, இவர்கள் பார்க்கத் தவறி விட்டார்கள். முரண்பாடு என்னவென்றால், இன்னும் பல அமைச்சர்கள் எளிமையாக வாழ்ந்து, பேருந்தில் பயணம் செய்து, தங்கள் தொகுதிகளுக்காக உழைத்து வருகிறார்கள்" என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் அமைச்சர் சஞ்சய் நிருபம் இந்த முடிவை தான் ஆதரிக்கவில்லை என்றும், அனைவரையும் போல பயணம் செய்வதே சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஏற்கெனவே எம்.பி.க்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகளைத்தான் பெறுகிறார்கள். எனவே இது தேவையற்றது என தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கடந்த மூன்று வருடங்களாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், விமான சேவை நிறுவனங்கள் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றுவதில்லை, எம்.பி.க்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை கொடுப்பதில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அனைத்து விமான நிறுவனங்களும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த விதிமுறைகளின் படி, தனியார் மற்றும் அரசு விமான சேவை நிறுவனங்கள் அனைத்தும், எம்.பி.க்களுக்கான தனி ஓய்விடங்கள், இலவச தேநீர், காஃபி அல்லது தண்ணீர், முனையத்திற்குள் சென்று வர அனுமதி முதலிய சலுகைகளைத் தர வேண்டும்.

மேலும், எம்.பி.க்களுக்கு அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் முறையாகப் பெற்றுத் தர விமான நிலையத்தின் அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும்.

இதுவரை எம்.பி.க்களுக்கு இத்தகைய வசதிகளை செய்து தரும் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தவிர, பட்ஜெட் விமான சேவைகள் தரும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரஃபுல் படேல் இந்த உத்தரவில் ஏதும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை என்றும், ஒரு எம்.பி.க்கு கொஞ்சம் சலுகைகளும், மரியாதையும் கொடுப்பதை தேவையில்லாமல் பெரிய பிரச்சினை ஆக்க வேண்டாம் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ஏற்கெனவே சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதால் இந்த உத்தரவில் எதுவும் புதிதாக இல்லை என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT