குற்ற வழக்குகளில் இதுவரை தண்டனை விதிக்கப்பட்ட 27 எம்.பி., எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
குற்றவியல் வழக்குகளில் 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்ற எம்பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழப்பர் என்று கடந்த ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஊழல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரசூல் மசூத், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் எம்.பி. ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் ஜூலை 10-ம் தேதிக்கு முன்னர் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது எம்பி, எம்.எல்.ஏ.க்களாக பதவி வகிக்கும் 27 பேரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தன்னார்வ தொண்டு அமைப்பான லோக் பிரஹ்ரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தொண்டு நிறுவனத்தின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதேபோல் லாலு பிரசாத், ரசூல் மசூத் ஆகியோரின் தொகுதிகளை காலியிடங்களாக அறிவிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக மக்களவை, மாநிலங்களவைச் செயலர்கள் ஏற்கெனவே நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.