அரசியல் சதி காரணமாக லாலுவுக்கு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது என்று அவரது மனைவியும், பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி கூறியுள்ளார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக ராப்ரி தேவி, பாட்னாவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
லாலுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரம் இல்லாத நிலையிலும், அரசியல் சதி காரணமாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதியை எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இந்த விவகாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். கட்சியை நான் வழிநடத்துவேன். அதே சமயம் கட்சியின் தலைமையில் எவ்வித மாற்றமும் இருக்காது" என்றார்.
அக்கட்சியின் மூத்த தலைவர் ரகுவம்ச பிரசாத் சிங் கூறுகையில், "கட்சித் தலைமையில் மாற்றம் இருக்காது. கட்சித் தலைவர் 10 அல்லது 20 நாள்கள் சிறையில் இருந்தாலே தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்ன?
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். லாலு விரைவில் ஜாமீனில் வெளியே வருவார். லாலுவிடம் கீதைப் புத்தகத்தை அளித்துள்ளேன். அதை பாதி படிப்பதற்குள், அவர் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு, அனைத்துக் கட்சிகளும் முதலில் ஆதரவு தெரிவித்தன. பின்னர், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று லாலு எம்.பி. பதவியை இழப்பார் எனத் தெரிந்ததும், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரின. இந்த விஷயத்தில் இவ்விரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டன" என்றார்.
கட்சித் தலைவர் 10 அல்லது 20 நாள்கள் சிறையில் இருந்தாலே தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்ன?