நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சோனியாவும் ராகுல் காந்தியும் முறைகேடாக பயன்படுத்துவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
சோனியா, ராகுல் தவிர காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் ஆறு பேருக்கும் விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது.
இதனிடையே இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோனியா, ராகுல் தரப்பு வழக்கறிஞர்கள் “இன்று ஒரு நாளில் விவாதத்தை முடிக்க முடியாது” எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி வி.பி. வைஷ், வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அதுவரை விசாரணை நீதிமன்றத்தின் சம்மனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி, “டிசம்பர் 9-ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறவிருப்பதால், அதற்கும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை நிறைவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.