சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமானது என்பதை மத்திய அரசு தகுந்த முறையில் ஆய்வு செய்து நிலைநிறுத்தும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் கடும் குற்றங்களை தடுக்க பொது வழிமுறைகள் வகுப்பது குறித்து மத்திய புலனாய்வு நிறுவனம்(சிபிஐ) நடத்தும் 3 நாள் சர்வதேச கருத்தரங்கை, பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
விழாவை துவக்கி வைத்து பேசிய அவர் : சிபிஐ அமைப்பின் சட்டத்தன்மை குறித்து அண்மையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரத்தில் மத்திய அரசு தகுந்த முறையில் ஆய்வுசெய்து சிபிஐ அமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும்.
சிபிஐ சார்பில் முன்னர் நடத்தப்பட்ட, தற்போது நடத்தப்படும் வழக்குகளின் விசாரணைகளும், புலன் விசாரணைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தின் தலையீடும் அவசியம் என்றார்.
வழக்கின் பின்னணி:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் நவேந்திர குமார் தன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1963-ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு மூலம் சிபிஐ உருவாக்கப்பட்டது, அந்த அமைப்புக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திரா ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சகம் 1963 ஏப்ரல் 1-ல் நிறைவேற்றிய ஓர் தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை.
எனவே, சிபிஐ அமைப்பை போலீஸ் படையாகக் கருத முடியாது. அந்த அமைப்பு குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்டவிரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
சிபிஐ சட்டபூர்வமற்ற அமைப்பு என்று குவஹாட்டி உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.