காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜாமியா மசூதிக்கு வெளியே போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். பலியானவர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அயூப் பண்டித் என அடையாளம் தெரியவந்துள்ளது, இதனையடுத்து பாஜக கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் காலித் ஜெஹாங்கீர் கூறும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் தங்கள் முதலாளிகளை சந்தோஷப்படுத்த சிலரின் அடியாட்கள் மக்களையும் போலீஸையும் அடித்துக் கொல்வதில் சாடிச இன்பம் அடைகின்றனர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகமது அயூப் பண்டிட்டை அடித்துக் கொலை செய்தது இருதயத்தை கனக்கச் செய்துள்ளது, அவர் யாருக்காக காவலிருந்தாரோ, யாரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தாரோ அவர்களே இவரை கொலை செய்துள்ளனர்.
ஹுரியத் மாநாடு சேர்மன் மிர்வைஸ் உமர் பரூக்கிற்கு பாதுகாப்பு அளிக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருக்குப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.
கொலையுண்ட எஸ்.பி. குடும்பத்தினருக்கு எனது இதயம் கனத்த ஆறுதல்கள், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் நிம்மதிக்காக பிரார்த்திக்கிறேன்” என்றார்.
பண்டிட்டை நிர்வாணப்படுத்தி கல்லால் அடித்து கொன்ற சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.