சிறையில் தள்ளப்பட்டதால் லாலுவிற்கு பின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைமையை ஏற்பது யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ரகுவம்ச பிரசாத் அல்லது ராப்ரி தேவி - இவர்களில் யார் தலைவர் என அந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் விரைவில் முடிவு செய்ய இருக்கிறது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுவின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதால், அவருக்கு பின் கட்சியின் தலைமையை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே பிரச்சினைக்காக 1997-ல் முதல் அமைச்சராக இருந்த லாலு, தனக்கு பதிலாக தன் மனைவி ராப்ரி தேவியை அமர்த்தி இருந்தார்.
இது பற்றி பாட்னாவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது: 'அப்போது பிகாரில் ஆளும்கட்சியாக இருந்ததால் பிரச்சினை எதுவும் எழவில்லை. இப்போது, வலுவிழந்த எதிர்க்கட்சியாக இருப்பதால் மிகவும் உறுதியான ஒருவரை தலைவராக்க தொண்டர்கள் விரும்புகின்றனர். லாலு சார்ந்திருக்கும் யாதவர் சமூகத்தினரே கட்சியில் அதிகம். எனவே, தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாதை விட ராப்ரிக்கே தலைவராக வாய்ப்பு அதிகம்." எனத் தெரிவித்தனர்.
இதற்காக, வரும் 5-ம் தேதி பாட்னாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், அடுத்த தலைவரை முடிவு செய்வதற்காக, ராப்ரிதேவி தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைய உள்ளது.
இதற்கிடையே, லாலுவின் மீதான தீர்ப்பு வெளியானவுடன் கட்சி கலகலத்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பாட்னாவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான 'கியானு' என அழைக்கப்படும் கியானேந்தர்குமார் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை விட்டு வெளியேறி புதன்கிழமை காங்கிரஸில் சேர்ந்தார். அதேபோல், மத்திய பிரதேசத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி மாநில பிரிவு முழுவதுமாக கலைக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த லாலுவுக்கு நெருக்க மானவரும், கட்சியின் மூத்த தலைவருமான போரா பிரசாத் யாதவ், 'மத்திய பிரதேச மாநிலத்தில் கட்சி போதிய வளர்ச்சி அடையாத நிலையில், அதை கலைப்பதால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. கியானேந்தர்குமாருக்கு நீங்கள் நினைக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. லாலுவின் சிறைவாசம் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எங்கள் தலைவர், சிறையிலிருந்து வந்த பின் இன்னும் உறுதியுடன் செயல்படுவார்' என நம்பிக்கை தெரிவித்தார்.