இந்தியா

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகனை விசாரித்தீர்களா?- சிபிஐயிடம் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில், முன்ன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதா என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆகஸ்ட் 28, 2014-ல் சிபிஐ, பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மீதான வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிபிஐயிடம் சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில், அத்துறை சார்ந்த முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதா?

இந்த விவகாரத்தில் நிலக்கரித் துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என சிபிஐ கருதாதது ஏன்?

இந்த ஊழல் தொடர்பாக தெளிவான ஒரு நிலை ஏற்பட முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என சிபிஐ ஏன் உணரவில்லை?

முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?" என சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.

நிலக்கரிச் சுரங்க துறை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், சிபிஐ நீதிமன்றம் கேள்விகளை முன்வைத்துள்ளது.

நீதிமன்றக் கேள்விகளுக்கு பதிலளித்த சிபிஐ விசாரணை அதிகாரி, " பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதேதவிர பிரதமரிடம் விசாரணை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை" என்றார்.

அதுதவிர, வழக்கின் விசாரணைக் குறிப்பை சீலிடப்பட்ட உறையில் போட்டு நீதிமன்றத்த்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், பிர்லா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்குமாறு கோரிய மனு குறித்து விவாதித்த ஸ்க்ரீனிங் கமிட்டியின் கூட்ட நடைமுறை விவரங்கள் அடங்கிய ‘மினிட்ஸ்’ காணாமல் போய் விட்டது என்று சிபிஐ விசாரணை அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததும் பலத்த கேள்விகளுக்கு இடம் வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT