இந்தியா

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: அகிலேஷ்-ராகுல் இணைந்து பிரச்சாரம்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து லக்னோவில் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ஆளும் சமாஜ்வாதியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாதி 298 தொகுதிகளிலும் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் போட்டி யிடுகின்றன.

வரும் 11-ம் தேதி அங்கு முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்வர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து லக்னோவில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.

லக்னோ காந்தி சிலையில் இருந்து ஹஸ்ரகஜ்ச் வரை அவர்கள் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்.

இதுகுறித்து சமாஜ்வாதி மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, ‘‘மதவாத சக்திகளுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இருகட்சிகளின் தலைவர்கள் இணைந்து பிரச்சாரம் செய்ய இருப்பது எங்கள் கூட்டணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்’’ என்றார்.

அகிலேஷும் ராகுலும் இணைந்து சுமார் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்வார்கள் என்று இரு கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT