பிரதமர் நரேந்திர மோடி தனது 66-வது பிறந்தநாளையொட்டி, தாயார் ஹிராபாவிடம் ஆசி பெற் றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 1950, செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடினார்.இதையொட்டி டெல்லியில் இருந்து விமானம் மூலம் காந்திநகர் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார்.
அங்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நேற்று காலை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி துணிச்சல்
ரேசன் பகுதியில் வசிக்கும் தனது தாயார் ஹிராபாவை சந்திக்க பாதுகாவலர்கள் இல்லாமல் தனி யாக காரில் புறப்பட்டுச் சென்றார். தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவருடன் சுமார் 25 நிமிடங்கள் செலவிட்டார்.
இதேபோல், ‘‘பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டுக்காகவும், சுய வாழ்க்கையிலும் மகத்தான சாதனைகள் புரிவதற்கு இன்று தொடங்கும் இந்த நாள் ஆரம்பமாக இருக்கட்டும் ’’ என தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும், பிரதமருக்கு ‘ட்விட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து பதில் ‘ட்வீட்’ செய்தார்.
மேலும், குஜராத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தஹோத் மாவட்டத்துக்கு சென்று பழங்குடியினருக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு சூரத் நகரில் உள்ள அதுல் பேக்கரி சார்பில் 3,750 எடை கொண்ட உலகின் மிகப் பெரிய கேக் தயாரிக்கப்பட்டது. இந்த கேக் விரைவில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.