கடந்த 3 நாள்களாக டெல்லி வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. காங்கி ரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஏன் இப்படி நடந்து கொண்டார் என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. இது தொடர்பாக பலரும் பல்வேறு ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்றும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச் சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட யாருமே எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் அக்கட்சியினர்.
உடனடியாக பிரதமர் மன்மோகனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சோனியா காந்தி, அவரை அவமரி யாதை செய்யும் வகையில் ராகுல் எதையும் தெரிவிக்கவில்லை என சமாதானப்படுத்தினாராம். பின்னர், அது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுமாறு ராகுலை சோனியா வற்புறுத்தினாராம்.
காங்கிரஸ் கட்சியினரைப் பொறுத்த வரை, இது முழுக்க முழுக்க ராகுல் காந்தியின் தன்னிச்சையான நடவடிக்கை எனக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர். இது தொடர்பாக டுவிட்டர், ஃபேஸ்புக் இணையதளங்களில் எல்லாம் ராகுலுக்கு ஆதரவான கருத்தை அக்கட்சியினர் பரப்பி வருகின்றனர். ராகுல் செய்தது சரியான செயல்தான்! என்ன, கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டுவிட்டார், இது ஒரு பெரிய விஷயமா என சப்பைக்கட்டு கட்டிவருகின்றனர்.
ஆனால், அவர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்ற கேள்வி இப்போதும் பலரை குடைந்து வருகிறது. கட்சியில் இருக்கும் பெரும் தலைகளையெல்லாம் ஓரங்கட்டும் நடவடிக்கை இது என்கின்றனர் ஒரு சிலர்.
வேறு சிலரோ, ஏதோ அத்திபூத்தாற் போல தனது கூட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து தலைகாட்டிவிட்டார் ராகுல். விரை வில் தனது இயல்பு (மௌன?) நிலைக்குச் சென்றுவிடுவார் என்கின்றனர்.
விஷயம் தெரிந்தவர்கள், இது அம்மா, பையனுக்கு இடையே நிகழும் கருத்து மோதல் என்கின்றனர். சமீப காலமாக பல்வேறு விவகாரங்களில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாம். குறிப்பாக, தனக்கு விசுவாசமாக இருப்ப வர்களுக்காக, எந்த அளவுக்கும் இறங்கி வந்து உதவும் சோனியாவின் போக்கு ராகுலுக்குப் பிடிக்கவில்லையாம்.
இந்த அவசரச் சட்டமே, கால்நடைத் தீவன ஊழலில் சிக்கியிருக்கும் லாலு பிரசாத் யாதவ் போன்றோரை காப்பாற்றுவதற்காகத்தான் என்று கூறப்படு கிறது. அது சரி, லாலு பிரசாத், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதைத் தாண்டி அவருக்கு சோனியா உதவ வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா?
வேறொன்றுமில்லை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் பதவிக்கு சோனியா முன்னிறுத்தப்பட்டபோது, அவர் இத்தாலியில் பிறந்தவர் என்பதால், பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது சோனியாவை லாலு பிரசாத் ஆதரித்தார். அந்த நன்றிக் கடன்தான் என்கின்றனர் தலைநகர் அரசியல்வாதிகள். ஆனால், பிகாரில் லாலுவை விட நிதீஷ் குமாருடன் கூட்டணி வைப்பதைத்தான் ராகுல் விரும்பு கிறார் என்கின்றனர். அதோடு, இடதுசாரிக் கட்சிகளுடன் நட்புடன் இருக்க விரும்பும் சோனியாவின் செயல்பாடும் ராகுலுக்குப் பிடிக்கவில்லையாம்.
அதன் விளைவுதான், ராகுலின் கொந்த ளிப்பான பேட்டி என்கின்றனர். பாவம், சோனியாவுக்கும் ராகுலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு திருதிருவென இப்போது விழித்துக் கொண்டிருக்கிறார் மன்மோகன்.