இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: போலீஸ் அதிகாரி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பட்கம் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; மூவர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள சதூரா சவுக் கிராமத்தில் காவல் நிலைய அதிகாரியும், துணை ஆய்வாளருமான ஷபிர் அகமது தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதலில் மார்பில் குண்டு துளைக்கப்பட்ட ஷபிர் அகமது இறந்து விட்டார் என்றும், காவலர் முகமது ஷபி மற்றும் எஸ்பிஓ பிர்டூஸ் அகமது மற்றும் அப்பகுதியில் கடை வைத்துள்ள குலாம் முகமது ஆகியோர் காயமடைந்தனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT