காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஆண்டுதோறும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை அளிக்க வேண்டும். ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததாக கூறி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறக்க மறுத்துவருகிறது. எனவே கடந்த 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், ''காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை முறைப்படி திறந்து விடுவதில்லை. நடப்பு நீர்ப்பாசன பருவ ஆண்டின் (2016-17) ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு 74.645 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும். ஆனால் 24.593 டிஎம்சி நீரை மட்டுமே பிலிகுண்டு அளவை நிலையத்தில் இருந்து கர்நாடகா திறந்து விட்டுள்ளது.
உரிய நீர் திறக்கப்படாததால் காவிரி நீரை நம்பி தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. இதை நம்பி வாழும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 19-ம் தேதி வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை உடனடியாக திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதே வேளையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரியுள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழக அரசின் மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், வரும் செப்டம்பர் 2-ம் தேதி இம்மனுவை விசாரிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.
சட்ட ஆலோசகர் அறிவுறுத்தல்
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிடுங்கள். இல்லாவிடில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பாலி எஸ்.நாரிமன் முதல்வர் சித்தராமையாவுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா மற்றும் காவிரி நீர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் டெல்லியில் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும், காவிரி வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞருமான பாலி எஸ்.நாரிமனை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதற்கு வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை திறந்துவிடுங்கள். இல்லாவிடில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வரும்போது, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். கர்நாடகாவில் வறட்சி நிலவினாலும் குறைந்தபட்சம் 25 டிஎம்சி நீரையாவது தமிழகத்துக்கு திறந்துவிடுங்கள்.
கிருஷ்ணராஜசாகர் அணையில் தற்போது இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள முன் வர வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கா விட்டால், இவ்வழக்கில் கர்நாட காவுக்கு பின்னடைவு ஏற்படும். கர்நாடக அரசு தரப்பின் நியாயங் களை உச்ச நீதிமன்றம் ஏற்பதும் சிக்கலாகிவிடும். எனவே நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக் கும் வகையில், காவிரி விவகாரத் தில் நடவடிக்கை எடுங்கள்” என சித்தராமையாவிடம் வலியுறுத் தியதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இந்நிலையில் சித்தராமையா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, '' காவிரி விவகாரத்தில் சட்டப்படி கர்நாடக அரசு நடந்துகொள்ளும். பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெறும் கர்நாடக அனைத்துக் கட்சிகளின் கூட்டத் தில் தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக முடிவெடுக்கப் படும்'' என்றார்.